வீடுகளில் இருந்து வௌியேறினால் கடும் நடவடிக்கை

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வீடுகளில் இருந்து வௌியேறினால் கடும் நடவடிக்கை

by Staff Writer 18-11-2020 | 1:18 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்களின் வீடுகளில் இருந்து வௌியில் செல்கின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் 77,531 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சுகாதார தரப்பினரும் பொலிஸாரும் இணைந்து தனிமைப்படுத்தியுள்ளவர்களை கண்காணிப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, தூர பிரதேசங்களிலிருந்து கொழும்பு கோட்டை பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு வருகை தருவோர் இந்த பகுதிகளில் தேவையற்ற விதத்தில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு நடமாடுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இதனிடையே, முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியைப் பேணாமை தொடர்பில் இதுவரை 297 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.