by Staff Writer 18-11-2020 | 7:44 PM
Colombo (News 1st) இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது.
2005 ஆம் ஆண்டு முதல் இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் இரண்டு வகையான அனுபவம் இருந்தது.
முதலாவது பாதுகாப்பு செயலாளராக அவராற்றிய சேவை.. இரண்டாவது நகர அபிவிருத்தியில் அவரது வகிபாகம்.
2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் குண்டுத்தாக்குதலை எதிர்கொண்ட கோட்டாபய ராஜபக்ஸ, 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி நாட்டில் நீடித்த மூன்று தசாப்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதில் பெரும் பங்காற்றினார்.
அன்று முதல் நகரங்களை அழகுபடுத்தும் பணிகளை ஆரம்பித்த கோட்டாபய ராஜபக்ஸ செயல் வீரராக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தார்.
1971 ஆம் ஆண்டு கெடெட் அதிகாரியாக செயற்பட்டு 1992 ஆம் ஆண்டு லெப்டினன்ட் கேர்ணலாக இராணுவ சேவைக்கு விடைகொடுத்த இந்த இராணுவ வீரரை முப்படைகளின் தளபதியாக மக்கள் உயர்த்துவதற்கும் இந்த ஈர்ப்பே காரணமாக அமைந்தது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 69,24,255 வாக்குகளைப் பெற்று 52.25 வீத வாக்காளர்களின் தெரிவாக இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த ஒரு வருடகாலத்தில் உலக பொருளாதார சரிவு போன்றே கொரோனா தொற்றையும் சற்றும் எதிர்பாராத வகையில் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகள் வரிசையில் இலங்கைக்கும் முக்கிய இடம் உண்டு.
அன்று முதல் இன்று வரை மக்களின் உயிர்களை பாதுகாத்து கொரோனா ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசியல் பண்பு, ஒழுக்கமுள்ள சமூகம் மற்றும் செயற்திறன் மிக்க அரச சேவையினை உறுதிப்படுத்துவதற்காக கடந்த ஓராண்டு காலத்தில் ஜனாதிபதி பல நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
அரச நிறுவனங்களில் தமது நிழற்படத்திற்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிபடுத்துமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பதற்கான பொறுப்பை நிபுணர் குழுவிடம் ஒப்படைத்தார்.
அரச நிறுவனத் தலைவர்களின் ஆடம்பரமான சம்பளம் வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
தமது வார்த்தைகளை சுற்றுநிரூபமாகக் கருதி செயற்படுமாறும் சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை விடுத்தார்.
அரச ஊழியர்கள் கட்சி அரசியலில் ஈடுபடக் கூடாது என அறிவித்த ஜனாதிபதி மக்களை சந்திப்பதற்காக மக்களிடம் சென்றார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு குறைகேள் அதிகாரி ஒருவரை நியமித்தமை, 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கியமை, மேலும் 10,000 நியமனங்களை வழங்கியமை என்பன ஓராண்டு பூர்த்தியில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாகும்.
குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கும் கடந்த ஆண்டில் ஜனாதிபதி தீர்மானித்தார்.
சிறைச்சாலைகளை பூரண மறுசீரமைப்பிற்கு உட்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாதாள குழுக்களை ஒழிப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
உள்நாட்டு, வௌிநாட்டு கொள்கை வகுப்பின் போது நேரடி தீர்மானங்களை எடுத்த ஜனாதிபதி மண், மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்தார்.
மஞ்சள், மிளகு, கறுவா போன்ற சிறு ஏற்றுமதி பயிர்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை தடை செய்தமையும் ஜனாதிபதியின் முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகும்.
வறுமை ஒழிப்பிற்கான செயலணியொன்றும் நாட்டில் மும்முரமாக செயற்படுகிறது.
சமூக நலன்புரிக்காக சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பிற்காக செய்கடமை நிதியமும் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.