கையில் ஆரம்பித்து மொட்டில் தொடரும் அரசியல்: அப்பச்சி எனும் அனுபவசாலி!

by Staff Writer 18-11-2020 | 8:19 PM
Colombo (News 1st) இலங்கை மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள முன்னோடி அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ. 1970 ஆம் ஆண்டு சோல்பெரி பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த இளம் பாராளுமன்ற உறுப்பினரும் அவரே. மீசை கூட வளராத காலத்தில் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த மஹிந்த, சவரக் கத்தியால் தயிரையும் தேனையும் உண்ணும் அரசியலில் ஏராளமான அனுபவத்தை தன்னகத்தே கொண்டுள்ளார். கிருவாபத்துவையின் மெதமுலன வலவையின் சால்வை அணிந்து மக்கள் மத்திக்கு வந்த, பெலிஅத்தவின் "பொடி புத்தா" அரை நூற்றாண்டு கடந்த நிலையில் அநேகமானவர்களால் அப்பச்சி என அழைக்கும் அளவிற்கு அனுபவசாலியாக திகழ்கின்றார். 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வழங்கிய தலைமைத்துவம் அவரை மேலும் உயர்த்தியது. 50 வருடங்களாக மக்களின் புள்ளடியால் அவர் அறுவடை செய்தவற்றை தொகுத்தால் இரண்டு சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சித் தலைவர், நான்கு தடவைகள் பிரதமர், இரண்டு தடவைகள் ஜனாதிபதியென பல சாதனைகள் உள்ளன. பாதயாத்திரை, வீதிப் போராட்டங்களுக்கு பழக்கப்பட்டவராக இருந்த மஹிந்த 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்து மெதமுலன வீட்டிற்கு சென்று குறுகிய காலத்தில் மஹிந்த அலையுடன் மீண்டும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார். அந்த ஆதிக்கம் பொதுஜன பெரமுன எனும் வலுவான அரசியல் கட்சியை உருவாக்கி, அனைத்து உள்ளூராட்சி மன்றங்ளையும் வெற்றிகொண்டு பாராளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியை கட்டியெழுப்பி, எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் தன்வசப்படுத்தி, அரசாங்கம் இருக்கும் போதே திடீரென 52 நாட்களுக்கு பிரதமர் பதவியை பெறும் அளவிற்கு வலுவானதாக இருந்தது. கை சின்னத்தில் ஆரம்பித்த மஹிந்தவின் அரசியல் இன்று மொட்டில் தொடர்கிறது. 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்து மெதமுலனவிற்கு சென்ற மஹிந்த ஆதரவாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
''நான் வீதியில் இருந்து வந்தவர். வீதிப் போராட்டங்கள் எனக்கு பழக்கமானவை, நான் வீதியில் வீழ்வதை விரும்புகிறேன், நான் எனது பாதையை அமைத்துக்கொள்வேன்"
மஹிந்த ராஜபக்ஸ என்ற இந்த மூத்த அரசியல்வாதி அரை நூற்றாண்டு காலமாக இலங்கை அரசியலில் சாதனை நிகழ்த்தி வருகிறார். இலங்கை அரசியலுக்கு அவர் ஒரு கை நூல்! இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு நியூஸ்ஃபெஸ்ட்டின் வாழ்த்துக்கள்!