வரவு செலவு திட்டம் 2021; முன்மொழியப்பட்ட விடயங்கள்...

by Staff Writer 17-11-2020 | 6:42 PM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் உத்தேச செலவு 2,678 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.40 மணியளவில் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த பிரமதமர், திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் குறித்து விசேட உரையாற்றினார். 2021 ஜனவரி மாதம் தொடக்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறும் நிறுவனங்களின் உடன்படிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்படும் என வரவு செலவு திட்ட உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார் நூற்றுக்கு 06 சதவீதம் பொருளாதார வளர்ச்சி வேகத்தை முன்னெடுத்து செல்ல அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். அரசாங்க ஊழியர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கியமைக்காக முன்னாள் அரசாங்கத்தை கண்டிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். சமூர்த்தி வங்கிகள் ஊடாக பயனாளிகளுக்கு கணக்கை ஆரம்பித்து, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளை அந்தக் கணக்கில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். Online ஊடாக முகாமைத்துவப்படுத்தக்கூடிய விசேட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி 2021 வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. வரிக்கான மேன்முறையீட்டு நீதிமன்றத்தை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வரவு செலவு திட்ட உரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். இதேவேளை, அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் உள்ளூர் நிறுவனங்களுக்கு 50 வீதம் வருமான வரிச்சலுகை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மயமாக்களின் மூலம் வெற்றியடைந்த உலகப் பொருளாதாரம், தொழில்நுட்ப பொருளாதாரத்தினை நோக்கி மாற்றமடைந்துள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவை துறைகளின் அபிவிருத்திக்காக பாரம்பரிய வழிமுறைகளுக்கு அப்பால் தொழில்நுட்ப ரீதியாக இத்துறைகளை ஒருங்கிணைத்து, உற்பத்தி மற்றும் வழங்கல் செயற்பாடுகளை நோக்கிச் செல்கின்ற சந்தர்ப்பமொன்றாக, கொள்கை வகுப்பாளர்கள் என்ற வகையில் இவற்றை பார்க்க வேண்டியுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்ளையும் விமான நிலையங்ளையும் சர்வதேச வர்த்தக தொழிற்பாட்டின் மத்திய நிலையங்களாக மாற்றிக்கொள்ளக் கூடியவாறு அபிவிருத்தி உபாய முறைகளையும் வழிமுறைகளையும் திட்டமிடுதல் வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார முயற்சிகளில் இளைஞர்களின் பங்களிப்பினை பெற்றுக் கொள்வதற்கும் விளையாட்டு நேய சமூகமொன்றின் கீழ், புற செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துவதற்கும் ஆரோக்கியமான சிறுவர் மற்றும் இளைஞர்களை உருவாக்கும் வகையில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் அபிவிருத்தியின்பால் அனைவரின் முறய்சிகளையும் ஒன்றுசேர்ப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். கஷ்டமான வாழ்வை கழிக்கும் விவசாயிகள், மீனவர்கள், பாரம்பரிய கைத்தொழில்களில் ஈடுபடுவோர், சுய தொழிலில் ஈடுபடுவோர், மனைப் பொருளாதாரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் பல்வேறு சிரமங்கள் காரணமாக நிரந்தர வருமானம் இல்லாதவர்கள், பணம், தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியாத சிறிய வியாபாரிகள் முதலானோரை வலுவடைய செய்வதே அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தூய எண்ணத்துடன் சேவையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களை அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்துவதை வரவு செலவு திட்ட உரையின் போது பிரதமர் கண்டித்துள்ளார். நிலையான வட்டி மற்றும் அந்நிய செலாவணி வீதம், வரி கொள்கை, வங்கி மற்றும் நிதி வசதிகள் மற்றும் நிறுவன தொழிற்பாடு மற்றும் பொருட்கள் சேவைகள் வழங்கல் ஆகியவற்றை ஊக்குவிக்கின்ற விதத்தில் வழிநடாத்த வேண்டியுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் மூலமான தேறிய இலாபத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் வசதிகளுடன் COVID - 19 நோய்த் தடுப்பு, குடி நீர் வழங்கல், கிராமிய பாதை அபிவிருத்தி, கிராமிய சுகாதார சேவைகளை விரிவுபடுத்தல், தாய் - சேய் போசணை மட்டத்தினை மேம்படுத்தல், மாணவர்களை தொழிற்கல்வியின்பால் ஊக்குவித்தல் என்பவற்றுக்கு வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. வியாபாரங்களை மிக தீர்க்கமான ஸ்திரத்தன்மையுடன்​ பேணும் வகையில் அடுத்த 5 வருடங்களுக்கு எவ்வித மாற்றமுமின்றி நிலைத்திருக்கும் வரி கொள்கையே பொருளாதார மறுமலர்ச்சியின் பிரதான நோக்கம் என பிரதமர் கூறியுள்ளார். மதுசாரம், சிகரெட்கள், தொலைத்தொடர்பு சூதாட்டம் மற்றும் வாகனங்கள் மீதான வரிகள் போன்ற பல்வேறு பண்டங்கள் சேவைகள் வரிகளுக்கு பதிலாக, online இல் முகாமை செய்யப்படும் தனியான ஒற்றை விசேட பொருட்கள் மற்றும் சேவைகள் வரியினை அறிமுகப்படுத்தவதன் மூலம் வரி சேகரிப்பின் வினைத்திற​னை மேம்படுத்துவதற்கும் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்