வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில்...

வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது 

by Staff Writer 17-11-2020 | 9:10 AM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்றத்தில் இன்று (17) சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். அடுத்த ஓராண்டு காலத்திற்கான அரசாங்கத்தின் செலவீனங்களை ஈடு செய்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீட்டு சட்டமூலமே வரவு செலவு திட்டம் எனப்படுகிறது. பாராளுமன்றத்தில் சுமார் ஒன்றரை மாத காலத்திற்கு வரவு செலவு திட்டத்திற்கான செயற்பாடுகள் இடம்பெற வேண்டியுள்ளது. இதன் முதலாவது நடவடிக்கையாக அரசாங்கத்தின் உத்தேச செலவு மதிப்பீடுகள் மற்றும் கடன் பெறும் கால எல்லை அடங்கிய நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் உத்தேச செலவு 2,678 பில்லியன் ரூபா என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தின் செலவுகளுடன் ஒப்பிடுகையில் 5.5 வீத அதிகரிப்பாகும். இந்த பணம் ஒவ்வொரு அமைச்சுகளினதும் திட்டங்களுக்காக பகிர்ந்தளிக்கப்படுகின்ற விதம் அதற்கான வருமானத்தை ஈட்டும் முறைமை அடங்கிய விரிவான வரவு செலவு திட்ட உரையை நிதி அமைச்சர் இன்று பிற்பகல் 1.40 மணிக்கு சபையில் நிகழ்த்தவுள்ளார். இது வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவு திட்ட உரை என அழைக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை நாடு எதிர்நோக்கியுள்ள COVID - 19 தொற்றுக்கு மத்தியில் அரசாங்கத்தின் வருமான மார்க்கங்கள் பல தடைப்பட்டுள்ளதுடன், சுகாதார மற்றும் நலன்புரி விடயங்களுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிடுவதற்கு நேரிட்டுள்ளது. இத்தகைய பின்னணியில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது. இதற்கான எதிர்வுகூறலாக அடுத்த வருடம் அரசாங்கத்தின் வரவு செலவு துண்டு விழும் தொகையை ஈடு செய்வதற்காக 2,900 பில்லியன் ரூபா வரை கடனை பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான அரச நிதி ஒதுக்கீட்டின்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளுக்கு போன்றே இராஜாங்க அமைச்சுகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். பாதுகாப்பு அமைச்சுக்கு அதிபடியாக 355 பில்லியன் ரூபா இம்முறை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, உள்ளக பாதுகாப்பு, உள்விவகார, இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்காக மேலதிகமாக 152 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்காக 271 பில்லியன் ரூபாவும் அதன் இராஜாங்க அமைச்சுக்காக 338 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதேவேளை, 2021 ஆம் ஆண்டு பெருந்தெருக்கள் அமைச்சுக்காக 330 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 160 பில்லியன் ரூபாவாகும். ஔடதங்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சுக்கும் 61 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தியதன் பின்னர் நாளை தொடக்கம் 21 ஆம் திகதி வரை 4 நாட்கள் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதம் என்றழைக்கப்படுகின்ற மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை வரை 16 நாட்கள் நடைபெறவுள்ளது. மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நிறைவில் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்று அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வரவுள்ளன.

ஏனைய செய்திகள்