ஜோ பைடன் விடுத்துள்ள எச்சரிக்கை 

ட்ரம்ப் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தினால் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படும் - ஜோ பைடன் 

by Staff Writer 17-11-2020 | 6:24 PM
Colombo (News 1st) தமது புதிய நிர்வாகத்திற்கு தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தினால், கொரோனாவினால் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படுமென அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஒருங்கிணைவு அவசியமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் அடைந்த தோல்வியை ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்றுக்கொள்ளாமை முற்றுமுழுதாக பொறுப்பற்ற செயற்பாடு எனவும் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு ட்ரம்பை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்ற போதிலும், தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக அவரது பிரசாரக்குழுவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அத்துடன் தேர்தல் மோசடிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். முக்கியமான மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கான போதிய ஆதாரங்கள் இல்லையென்பதுடன், அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஜனாதிபதியாவதற்கு 270 தேர்வாளர் கல்லூரி வாக்குகளை பெறவேண்டிய நிலையில், 306 பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஜோ பைடன் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இருப்பினும் ஜனாதிபதி தேர்தலில் தாமே வெற்றி பெற்றுள்ளதாக, பதவியிலுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் ட்விட் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.