புறக்கோட்டைக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தந்த வௌி மாவட்ட பஸ்கள்

by Staff Writer 16-11-2020 | 8:03 PM
Colombo (News 1st) புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மற்றும் கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையம் ஆகியன இன்று மீண்டும் திறக்கப்பட்டன. வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான பஸ்கள் இன்று புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்திருந்தன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஏ.எஸ் பீ. வீரசூரிய தெரிவித்தார். இன்று காலை மற்றும் பிற்பகல் வேளையில் அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொழும்பு கோட்டை தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரயில்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்று ரயிலில் மிகக் குறைந்தளவிலான பயணிகளே பயணித்திருந்தனர். இதேவேளை, கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், தொடர் மாடி குடியிருப்புகளில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த பகுதிகளில் தொற்றுநோயற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆரோக்கியத்திற்காக இலவசமாக இந்த சேவை வழங்கப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் சட்டத்தரணி ரோஷினி திசாநாயக்க தெரிவித்தார்.