தோல்வியை ஒப்புக்கொண்டாரா ட்ரம்ப்?

தோல்வியை ஒப்புக்கொண்டாரா ட்ரம்ப்?

by Bella Dalima 16-11-2020 | 3:36 PM
Colombo (News 1st) அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தனது ட்விட்டர் பதிவில் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், தோ்தலில் மோசடி நடைபெற்றதால் பைடன் வெற்றி பெற்றதாகவும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவா் கூறியுள்ளார். அமெரிக்க அதிபா் தோ்தல் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிட்ட ஜோ பைடன் போதிய பெரும்பான்மையைப் பெற்றுவிட்டதாக ஊடகங்கள் கணித்துள்ளன. அவரை எதிா்த்து போட்டியிட்ட தற்போதைய அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான ட்ரம்ப் தோல்வியைத் தழுவினாலும், அதனை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறாா். இந்நிலையில், அதிபா் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (15) வெளியிட்டுள்ள பதிவில்,
வாக்கு எண்ணிக்கையின் போது பாா்வையாளா் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தோ்தலில் மோசடி நடைபெற்றதால் ஜோ பைடன் வெற்றி பெற்றாா். ஊடகங்களும் போலியாக செயற்பட்டு அமைதி காக்கின்றன
என்று தெரிவித்துள்ளார். இந்த சுட்டுரை பதிவு மூலம் அவா் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், ‘தான் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை’ என மற்றொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடா்பாக ட்ரம்ப் தரப்பினா் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.