புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள்  

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

by Staff Writer 16-11-2020 | 2:29 PM
Colombo (News 1st) இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகளும் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இம்முறை 2 ,936 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3,31,741 மாணவர்கள் விண்ணப்பிருந்த நிலையில், 3,26,264 பேர் தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த முறை முதல் அமுல்படுத்தப்பட்டவாறு இம்முறையும் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், வெட்டுப்புள்ளிகள் அந்தந்த மொழி மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்,
  • கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் 169 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 160 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திருகோணமலை, பதுளை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 159 ஆகும்.
  • மன்னார், நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களில் 158 புள்ளிகள் வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகளினதும் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் தபாலில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு அது தொடர்பான விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் துரித இலக்கமான 1911 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.