வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2020 | 1:44 pm

Colombo (News 1st) வில்பத்து – கல்லாறு பகுதியில் காடு அழிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக வன இலாகா திணைக்களத்திற்கு சொந்தமான வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடு அழிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த பகுதியில் காடழிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை அறிவித்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனத் டி சில்வா, நிஸங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

இதற்கமைய, குறித்த பகுதியில் தனிப்பட்ட நிதியை பயன்படுத்தி மீள் நடுகை திட்டமொன்றை மேற்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு, முறைப்பாட்டாளர் தரப்பினர் வழக்கிற்காக செலவிட்ட தொகையை மீள செலுத்துமாறும் பிரதிவாதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்