சிரேஷ்ட ஊடகவியலாளர் சிட்னி சந்திரசேகரவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம் 

by Staff Writer 15-11-2020 | 8:59 PM
Colombo (News 1st) பல்வேறு படைப்புகளை படைத்து இலங்கையின் கலைத் துறையில் தனக்கென ஒரு இடம் பிடித்திருந்த ​சிரேஷ்ட ஊடகவியலாளரும் மூத்த கலைஞருமான காலஞ்சென்ற சிட்னி சந்திரசேகரவின் இறுதிக் கிரியைகள் இன்று (15) மாலை இடம்பெற்றன. பொரளை பொது மயானத்தில் அன்னாரின் பூதவுடல் இன்று அக்கினியுடன் சங்கமமானது. உடல்நல குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மூத்த கலைஞர் சிட்னி சந்திரசேகர நேற்று (14) தனது 61 வது வயதில் காலமானார். அன்னாரின் பூதவுடல் இன்று மாலை வரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கலைத்துறையில் தனக்கென தனியிடத்தை கோலோச்சிய சிட்னி சந்திரசேகரவிடம் கற்றுத் தேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தினர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரும் தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். சமய அனுஸ்டானங்களின் பின்னர் சிட்னி சந்திரசேகரவின் பூதவுடல் பொரளை பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது . தொலைக்காட்சி தொடர் நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கலை, பாடல்களை இயற்றும் வல்லமை, செய்திகள் என தனது ஒப்பற்ற திறமைகளால் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய ஒரு உன்னத மனிதரே சிட்னி சந்திரசேகர. நிதி கும்பா மல், குமாரயானெனி, பியாம்பன அஸ்வயா, சமுத்ர சாயா, பெம்பரயானெனி மற்றும் ஏ நைன் என்பன சிட்னியின் படைப்புகளாகும். பாடல்கள் ​இயற்றும் தனது திறமையால் பலரது மனங்களையும் கவர்ந்திழுத்த சந்திரசேகரவின் பாடல் வரிகள் எக்காலத்திலும் மக்களின் மனதில் நிலைத்திருக்கும். அண்மையில் முழு நாட்டையும் ஒன்றிணைத்த எழுந்திடு ஶ்ரீலங்கா பாடல் அவரின் மற்றுமொரு திறமைக்கான சான்றாகும். நியூஸ்பெஸ்டின் ஆலோசகராக செயற்பட்ட அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்ற போதிலும் அவரது நினைவுகள் என்றும் நீங்காது மலரும்.