கொழும்பில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி

கொழும்பு Lockdown பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி  

by Staff Writer 15-11-2020 | 11:13 AM
Colombo (News 1st) கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இறுக்கமான சுகாதார வழிமுறைகளுடன் அத்தியாவசிய சேவைகளுக்கான தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை (16) காலை 5 மணி முதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பில் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளிலுள்ள இலங்கை முதலீட்டு சபை மற்றும் அபிவிருத்தி சபையின் அனுமதி பெற்ற தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை நாளை முதல் ஆரம்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசியமான அரச நிறுவனங்களின் சேவைகளை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் இறுக்கமான கண்காணிப்பின் கீழ், வழங்கப்படும் சுகாதார வழிமுறைகளை குறித்த நிறுவனங்கள் கட்டாயமாக பின்பற்றுதல் அவசியம் என COVID - 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.