தொல்பொருள் உரிமங்களுக்கு அச்சுறுத்தல்: உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை

by Staff Writer 14-11-2020 | 9:02 PM
Colombo (News 1st) பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் காரணமாக தொல்பொருள் உரிமங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புதிய அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை தொல்பொருள் உரிமங்களை முகாமைத்துவம் செய்தல் என்ற பெயரில் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள் தொடர்பிலான தரவுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய தொல்பொருள் கொள்கை வௌியிடப்பட்டு 10 வருடங்கள் ஆகின்ற போதிலும், அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தொல்பொருள் திணைக்களம் கவனம் செலுத்தவில்லையென இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேசிய கொள்கை தற்போதைய நிலைக்கு ஏற்ப புதுப்பிக்கப்படவில்லையெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் உரிமங்கள், அழிவடைவதற்கு சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளும் போதிய மனித வளம் மற்றும் ஏனைய வளங்களில் காணப்படும் குறைபாடுகளுமே காரணம் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் பெறுமதியான இடங்களை விரைவில் வர்த்தமானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கைளில் குறிப்பிடப்பட்டுள்ளது.