சுகாதார விதிமுறைகளுக்கமைய தீபாவளியை கொண்டாடுக!

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தீபாவளியை கொண்டாடுமாறு கோரிக்கை

by Staff Writer 14-11-2020 | 12:03 PM
Colombo (News 1st) COVID-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில், பொதுமக்கள் ஒன்றுகூடும் சமய நிகழ்வுகளை மட்டுப்படுத்துமாறு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையன்று ஆலயங்களின் உள்ளேயோ வௌியிலோ அல்லது ஏனைய இடங்களிலோ ஒன்றுகூடுதல், சன நெரிசலான நிகழ்வுகளை நடத்துதல் என்பன அவதானத்திற்குரிய விடயங்களென திணைக்களம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளைத் தவிர்ப்பதுடன், ஆலயத்தினுள் ஒரே நேரத்தில் வழிபடக்கூடிய பக்தர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 05 ஆக வரையறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறு அனைத்து ஆலய நிர்வாகத்தினரிடமும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனிடையே, தீபாவளி பண்டிகையை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு இந்து மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. COVID-19 வைரஸ் தொற்று பரவுவதை தவிர்ப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட அதிக அபாயம் நிலவும் பகுதிகளில் இருந்து நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு பயணங்களை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி அனைவரும் செயற்படுவது அவசியம் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்