கடமைக்கு சமூகமளிக்குமாறு துறைமுக ஊழியர்களிடம் துறைமுக அதிகார சபையின் தலைவர் கோரிக்கை

by Staff Writer 14-11-2020 | 8:31 PM
Colombo (News 1st) ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், துறைமுகத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக கடமைக்கு சமூகமளிக்குமாறு துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்னாயக்க, துறைமுக ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் சுமார் 40,000 கொள்கலன்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுக வளாகத்தினுள் 61 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், நாளாந்தம் 2500 முதல் 3000 பேர் வரையில் கடமைக்கு சமூகமளிக்கின்றனர். இதனால் நாளாந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஓய்வுபெற்ற ஊழியர்கள் 60 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஜய கொள்கலன் முனையத்தின் 30 வீதமான ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், கொழும்பு துறைமுகத்தில் பொருட்களுடன் உள்ள கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், துறைமுக ஊழியர்கள், சுங்க ஊழியர்கள் மற்றும் ஏனைய ஒருங்கிணைந்த ஊழியர்கள் அனைவரையும் தமது கடமைகளை நிறைவேற்ற சேவைக்கு சமூகமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாக தயா ரத்னாயக்க குறிப்பிட்டார். அவர்களின் கடமையிலேயே முழு நாட்டினதும் வளர்ச்சி தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்