இருள் நீக்கும் தீபத்திருநாள்!

இருள் நீக்கும் தீபத்திருநாள்!

by Staff Writer 14-11-2020 | 11:55 AM
Colombo (News 1st) இந்துக்களின் பண்டிகைகளும் விழாக்களும் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை போதிப்பனவாக விளங்குகின்றன. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்த திருநாளான சுடர்களின் திருநாளை உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளியாகக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகின்றது. காத்தற்கடவுளான மஹாவிஷ்ணு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகங்கள் தோறும் அவதார புருஷராக பூமியில் ஜனனித்ததாக வரலாறு கூறுகின்றது. துவாபரயுகத்தில் கொடுங்கோலோச்சிய கம்சன், நரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்வதற்காக பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் ஆயர் குடியில் கிருஷ்ணராய் அவதரித்தார். பாண்டவர்களின் தோழராய், பார்த்திபனின் சாரதியாய், குருசேத்திரத்தில் மகாபாரதப் போரை வழிநடத்திய கண்ணபிரான் அன்று தர்மத்தை நிலைநாட்டினார். வரங்கள் பல பெற்று மக்களை துன்புறுத்திய நரகாசுரனையும் கிருஷ்ண பரமாத்மா சம்ஹாரம் செய்து மக்களுக்கு வாழ்வளித்தார். நரகாசுரனுக்கு அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் கைகூடியதை நினைவுகூரும் நோக்கில் தீபத்திருநாளன்று இல்லங்களும் கோவில்களும் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. உள்ளொளி ஏற்பட்டு நான் எனும் உணர்வை கடப்பதன் மூலமாகவே ஆயிரங்கோடி ஜோதி சொரூபமான பரப்பிரம்மத்தை அடைய முடியும் என்ற தத்துவத்தையும் அகல் விளக்கு வழிபாடு உணர்த்துகின்றது. இந்தியா, இலங்கை, நேபாளம், மியன்மார், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஔி கண்டகலும் இருள் அரக்கன் போல், உள்ளங்கள் கொண்ட ஆணவமும் அகந்தையும் அகன்று, ஞானமும் கருணையும் ஔிவீசிட அனைவருக்கும் நியூஸ்ஃபெஸ்ட்டின் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!