ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் தீபாவளி வாழ்த்து

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் தீபாவளி வாழ்த்து

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2020 | 11:42 am

Colombo (News 1st) தீபத் திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வௌியிட்டுள்ளனர் .

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சமய கிரியைகளில் ஈடுபடுவது மனித உள்ளங்களுக்கு அமைதியைத் தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த தீபத்திருநாளில் அமைதிக்காக, எமது நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களும் ஒரு மனதாக, கடவுளுக்காக அர்ப்பணிப்புகளை செய்வர் என நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது சிறந்ததோர் சமூகத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கட்டியெழுப்பும் தமது நோக்கத்திற்கு ஆசிர்வாதமாக அமையும் என எண்ணுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இருளை அகற்றி, ஒளியேற்றும் உயர்ந்த சமயப் பண்டிகைத்  தினமான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட காலமாக மக்களைப் பிரித்து வைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இந்த தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 நோய்த் தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியினை அரசாங்கம் மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

COVID-19 தொற்றிருந்து இலங்கை திருநாடு விரைவில் மீள்வதற்கும் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இந்த தீபாவளித் திருநாள் அமையட்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா எனும் அரக்கனை அழிப்பதற்காக இந்நன்நாளில் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்