மன்னிப்பு கோரினார் ஃபில் சிமன்ஸ்

வீரர்களுக்காக மன்னிப்பு கோரிய மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளர் 

by Staff Writer 13-11-2020 | 9:12 AM
Colombo (News 1st) அணி வீரர்கள் நியூஸிலாந்தின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் ஃபில் சிமன்ஸ் (Phil Simmons) மன்னிப்பு கோரியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி, டெஸ்ட் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ளது. நியூஸிலாந்தின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம், வௌிநாடுகளில் இருந்து வருகை தருவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும். தனிமைப்படுத்தலில் உள்ள போதிலும், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு நியூஸிலாந்து அனுமதி வழங்கியது. எனினும் வீரர்கள், உணவினை பகிர்ந்து உட்கொண்டமை மற்றும் தனிமைப்படுத்தல் நிறைவடைவதற்கு முன்னர் பிற நபர்களுடன் தொடர்புகளை பேணியதால், கடந்த புதன்கிழமை முதல் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு பயிற்சிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு 4 நாட்களுக்கு பயிற்சிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர், எதிர்வரும் 27 ஆம் திகதி ஒக்லண்டில் ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி ஹெமில்டனில் ஆரம்பமாகவுள்ளது.