ரிஷாட் பதியுதீனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு 

ரிஷாட் பதியுதீனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு 

by Staff Writer 13-11-2020 | 11:59 AM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீனின் வழக்கு விசாரணை இன்று (13) கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்குமாறு அவரின் சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், விளக்கமறியல் உத்தரவை நீடித்துள்ளார். இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான அழகரத்தினம் மனோரஞ்சனும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான மொஹமட் யாசிமை ஒரு இலட்சம் ரூபா ரொக்க பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல அனுமதித்த நீதவான் வௌிநாட்டு பயணத்திற்கு தடை விதித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் போது புத்தலத்திலிருந்து மன்னாருக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்காக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதனூடாக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.