by Staff Writer 12-11-2020 | 8:41 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கொழும்பில் இருந்து சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களால் இன்று (12) கைது செய்யப்பட்டார்.
ஆரையம்பதியிலுள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை 9.00 மணியளவில் சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பிரசாந்தனை கைது செய்துள்ளனர்.
ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஷ்வான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது எதிர்வரும் 23 திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.