மும்பை இந்தியன்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது

IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது 

by Staff Writer 11-11-2020 | 10:06 AM
Colombo (News 1st) இம்முறை IPL தொடரில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது தடவையாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. IPL தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நேற்று இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கெபிடெல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க ஷிகர் தவன் 15 ஓட்டங்களையும் ரஹானே 02 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ஓட்டங்களையும் ரிஷப் பண்ட் 56 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலு சேர்த்தனர். டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கட் இழப்பிற்கு 156 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்ரென்ட் போல்ட் 03 விக்கெட்களை கைப்பற்றினார். 157 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்ப வீரராக களமிறங்கிய, மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 51 பந்துகளில் 04 சிக்ஸர்கள் 05 பௌன்ட்ரிகள் உள்ளடங்கலாக 68 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். குயின்டன் டி கொக் 20 ஓட்டங்களையும் இஷான் கிஷான் 33 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 19 ஓட்டங்களையும் பெற்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி 18 தசம் 4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்ரென்ட் போல்ட் தெரிவானார். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படும் அதேவேளை 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் IPL கிண்ணத்தை மும்பை இந்தின்ஸ் அணி சுவீகரித்துள்ளது. இதனடிப்படையில், மிகவும் திறமை வாய்ந்த அணியாக கிரிக்கட் தொடர் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.