தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் 

27 பொலிஸ் பிரிவுகளும் சில கிராம சேவையாளர் பிரிவுகளும் தனிமைப்படுத்தல்

by Staff Writer 10-11-2020 | 1:13 PM
Colombo (News 1st) 27 பொலிஸ் பிரிவுகளும் சில கிராம சேவையாளர் பிரிவுகளும் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்குலானை வடக்கு மற்றும் அங்குலானை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், கந்தானை, மஹாபாகே பொலிஸ் பிரிவுகள் நேற்று (09) முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குருநாகல் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியின் இலிப்புகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவும் கடைவீதி கிராம உத்தியோகத்தர் பிரிவும் தவிர்ந்த, ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கலகெதர, ஹம்மலவ மற்றும் மேல் கலுகொமுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்த, குறித்த பொலிஸ் பிரிவின் ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நேற்று அதிகாலை 05 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டது. இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் பிரவேசிக்கவோ அங்கிருந்து வௌியேறவோ எவருக்கும் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கும், அந்த பகுதிகளூடாக பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ரயில்கள் பயணிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இவ்வாறு பயணிக்கும் பஸ்கள் மற்றும் ரயில்களை அங்கு நிறுத்தவோ, பயணிகளை ஏற்றி இறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்