ட்ரெயில்பிளேசர்ஸ் அணி சாம்பியனானது

மகளிர் T20 சவால் கிண்ண கிரிக்கெட் தொடரில் ட்ரெயில்பிளேசர்ஸ் சாம்பியனானது

by Bella Dalima 10-11-2020 | 2:19 PM
Colombo (News 1st) IPL T20 ​தொடருக்கு இணையாக நடத்தப்பட்ட மகளிர் T20 சவால் கிண்ண கிரிக்கெட் தொடரில் (Women's T20 Challenge) ட்ரெயில்பிளேசர்ஸ் (Trailblazers) அணி சாம்பியனானது. இறுதிப் போட்டியில் சூப்பர்நோவாஸ் ( Supernovas) அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்திய ட்ரெயில்பிளேசர்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. நேற்று சார்ஜாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ட்ரெயில்பிளேசர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ட்ரெயில்பிளேசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 118 ஓட்டங்கைளைப் பெற்றது. அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனை சுமித்தி மந்தனா 3 சிக்சர்கள் 5 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார். இவரைத் தவிர ஏனையவர்கள் பெரிதும் பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் சூப்பர்நோவாஸ் அணி சார்பில் ராதா யாதவ் நான்கு ஓவர்களுக்கு 16 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 119 என்ற இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர்நோவாஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான சமரி அத்தப்பத்து மற்றும் ரொட்ரிகோஸ் ஆகிய ஜோடியினால் பெரிதும் பிரகாசிக்க முடியவில்லை. நிகர இடைவெளியில் விக்கெட்கள் வீழ்த்தப்பட, பெரும் தடுமாற்றத்திற்குள்ளான சூப்பர்நோவாஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 102 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது. அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் 36 பந்துகளுக்கு 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அவரைத் தவிர சசிகலா சிறிவர்தன 19 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். தொடரில் முதற்தடவையாக ட்ரெயில்பிளேசர்ஸ் அணி மகுடம் சூடியது. போட்டியின் சிறந்த வீராங்கனையாக சுமித்தி மந்தனாவும் தொடரின் சிறந்த வீராங்கனையாக ராதா யாதவும் தெரிவாகினர்.