தமிழகத்தில் கைதானவருடன் தொடர்பு:யாழில் ஒருவர் கைது

தமிழகத்தில் கைதாகியுள்ள இலங்கையருடன் தொடர்புடைய சந்தேகத்தில் யாழில் ஒருவர் கைது

by Staff Writer 10-11-2020 | 7:34 PM
Colombo (News 1st) பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தப்பிச்சென்ற இலங்கையருடன் தொடர்புடைய சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மனைவி மற்றும் மகனுடன் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச்சென்ற சந்தேகநபர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரின் மகன் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபரை இந்தியாவிற்கு அழைத்துச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நேற்று ஒருவரை கைது செய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். படகோட்டி என சந்தேகிக்கப்படும் தொண்டைமானாறு பகுதியை சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிராக குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு முரணாக ஆட்கடத்தல், வேறு நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்று வந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சந்தேகநபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று (09) மாலை ஆஜர்படுத்தியதை அடுத்து, அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். தப்பிச்செல்ல பயன்படுத்தப்பட்ட படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், படகின் உரிமையாளர் உட்பட அவரது குடும்பத்தினர் ஐவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரிடம் இன்றும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துகொண்டதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.