கர்ப்பிணி, குழந்தைகளுடைய பெண் பொலிஸாருக்கு சலுகை 

கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுடைய பெண் பொலிஸார் கடமைகளுக்கு சமூகமளிக்காதிருக்க அனுமதி

by Staff Writer 10-11-2020 | 12:00 PM
Colombo (News 1st) மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கர்ப்பிணி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 02 வயதிற்கும் குறைந்த பிள்ளைகளுடைய பெண் பொலிஸார் கடமைகளுக்கு சமூகமளிக்காது வீடுகளில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் பொலிஸ் மா அதிபரினால் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவர்கள் கடமைகளுக்கு சமூகமளிக்காது வீடுகளிலேயே இருந்தாலும் அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் ஆலோசனைக் கோவை வௌியிடப்பட்டுள்ளதுடன், பிராந்திய தலைமை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்காக விசேட சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.