இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு கடனுதவி

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவி வழங்குவது தொடர்பில் கவனம்

by Staff Writer 10-11-2020 | 5:15 PM
Colombo (News 1st) இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இளைஞர் நிதியமொன்றை ஸ்தாபிப்பதன் மூலம் சிறு வர்த்தகர்களுக்கு கடன் நிவாரணம் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (09) இடம்பெற்ற கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்ட போதே நாமல் ராஜபக்ஸ இதனைக் கூறியுள்ளார். பாதகமான ஆவணங்களினால் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடியாதுள்ள தரப்பினருக்கு கடன்களைப் பெற்றுக்கொடுத்து அவர்களது வர்த்தகம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தீர்வைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இளைஞர்கள் மத்தியில் விவசாயத்தை ஊக்குவித்தல் மற்றும் சுவசக்தி கடன் திட்டத்தின் கீழ் 5.5 வீதமென்ற குறைந்த வட்டிவீதத்தில் கடனை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், கஷ்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, குறித்த பிரச்சினை தொடர்பில் விரைந்து தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியாவில் விசேட தேவையுடைய சுமார் 12 ஆயிரம் சிறுவர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கான கல்வி நிலையத்தை அமைப்பது தொடர்பில் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சரினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.