குருநாகலில் பெரும்பாலான பகுதிகள் விடுவிப்பு

குருநாகலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெரும்பாலான பகுதிகள் விடுவிப்பு

by Staff Writer 09-11-2020 | 8:03 PM
Colombo (News 1st) குருநாகல் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியின் இலிப்புகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கடைவீதி கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளை விடுவிப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கலகெதர, ஹம்மலவ மற்றும் மேல் கலுகொமுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்த, குறித்த பொலிஸ் பிரிவின் ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மேலும் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனிடையே, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 14 ,101 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 595 பேர் இன்று குணமடைந்தனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து 8,880 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 5,186 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு பதிவான கொரோனா மரணத்துடன், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.