மன்னாரில் கிராம உத்தியோகத்தரின் படுகொலை தொடர்பில் கைதானவருக்கு விளக்கமறியல்

மன்னாரில் கிராம உத்தியோகத்தரின் படுகொலை தொடர்பில் கைதானவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2020 | 8:36 pm

Colombo (News 1st) மன்னார் – மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தரின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மன்னார் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் இன்று இருவர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாற்றப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் சந்தேகத்திற்கு வித்திடுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மன்றில் சுட்டிக்காட்டினார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய, இலுப்பைக் கடவை கிராம உத்தியோகத்தர் எஸ்.விஜியேந்திரன் கடந்த 03 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதற்கமைய கைது செய்யப்பட்டிருந்த இருவரே இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

கொலையுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று உத்தரவிட்டார்.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட மன்னார் மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ். கிராம உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்த படுகொலையை கண்டிக்கும் வகையில் கறுப்பு பட்டியை அணிந்தவாறு அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்