திறக்கப்படும் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள்

திறக்கப்படும் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள்

by Fazlullah Mubarak 09-11-2020 | 10:00 AM
தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் திறக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் தொடர்பில் ஆலோசனைக்கோவை வௌியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், நிறுவன தலைவர்கள் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்பிரகாரம், நிறுவனமொன்றில் அல்லது வர்த்தக நிலையங்களில் சமூக இடைவௌியை கடைபிடிக்கக்கூடிய வகையில் ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி பேண வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எந்நேரமும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் உடல் வெப்பத்தை அளவிடுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். மேலும் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ஊழியர்கள் கைகளை கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார். நிறுவனங்களை சுகாதார பாதுகாப்புடன் நடாத்திச் செல்லும் முறைமை தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள ஆலோசனைக் கோவையை பின்பற்றுமாறு நிறுவனத்தலைவர்களிடம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, சமூக இடைவௌியை கடைபிடித்து பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு நிறுவனத்தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்