எஞ்சிய வனப்பகுதிகளை பயன்படுத்த அனுமதி

எஞ்சிய வனப்பகுதிகளை உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதி

by Staff Writer 09-11-2020 | 5:34 PM
Colombo (News 1st) எஞ்சிய வனப்பகுதிகளை பொருளாதார மற்றும் ஏனைய உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்தை இரத்து செய்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தின் பிரகாரம் பாதுகாக்கப்பட்ட இடமாக இதுவரை அறிவிக்கப்படாத வனப்பகுதிகள், எஞ்சிய வனப்பகுதிகளாகக் கருதப்படுகின்றன. 2001 ஆம் ஆண்டு வௌியிடப்பட்ட 2001 (5) ஆம் இலக்க சுற்றறிக்கையின் அடிப்படையில், இந்த பகுதிகள் தன்னிச்சையாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்து பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சுற்றறிக்கையின் பிரகாரம், எஞ்சிய வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களை பொருளாதார மற்றும் ஏனைய உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதற்கான அனுமதியை விசேட மீளாய்வுக் குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமென தெரிவிக்கப்பட்டுள்ளது.