இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடுமாறு நீதிமன்றம் உத்தரவு

இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடுமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2020 | 8:46 pm

Colombo (News 1st) வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களின் 121 படகுகளை ஏலத்தில் விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் மற்றும் ஊர்காவற்றுறை கடற்பரப்பிற்குள் பிரவேசித்திருந்த போது கடற்படையினரால் இந்த படகுகள் கைப்பற்றப்பட்டிருந்தன.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 94 படகுகளையும் மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 27 படகுகளையும் ஏலத்தில் விடுவதற்கான அனுமதியினை இரு நீதிமன்றங்களும் வழங்கியுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் ஊடுருவிய 37 படகுகள் மன்னார் நீதிமன்ற உத்தரவின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றினை விடுவிக்க 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

எவ்வாறாயினும், இந்தியாவில் இருந்து வருகை தந்த மீனவ அமைப்புகள் அவற்றில் 10 படகுகளை மாத்திரம் கொண்டு சென்றதுடன், அதிகம் சேதமடைந்திருந்த ஏனையவற்றை கைவிட்டன.

அத்தோடு, ஊர்காவற்றுறை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டு வரை தடுத்து வைக்கப்பட்ட படகுகளில் கைவிடப்பட்ட 94 படகுகளையே ஏலத்தில் விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த படகுகளை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையிலேயே நீதிமன்றங்கள் அந்த அனுமதியை வழங்கியுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்