மேல் மாகாணத்தில் வாழும் மக்களுக்கான நிவாரணம்

மேல் மாகாணத்தில் வாழும் மக்களுக்கான நிவாரணம்

by Staff Writer 08-11-2020 | 11:41 AM
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் வாழும் மக்களுக்கான நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கம்பஹா மாவட்டத்தில் ஐந்து இலட்சத்து 64 ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக, 262 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கிட தீர்மானிக்கப்பட்டதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹன் ப்ரதீப் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் இதுவரை நூற்றுக்கு 64 வீத குடும்பங்களுக்கான, ஐயாயிரம் ரூபா கொடுப்பனவுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று, பியகம, களனி, வத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் அடுத்த வாரமளவில் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹன் ப்ரதீப் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் இன்று காலை வரை ஏழாயிரத்து 685 குடும்பங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்தார். அவற்றில் சுமார் ஏழாயிரத்து 290 குடும்பங்களுக்கு, அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைவாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்தார். மாவட்டத்தில் நிவாரண நடவடிக்கைகளுக்காக 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில் அதனை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதேபோன்று, கொழும்பு மாவட்டத்தில் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் திட்டத்தில் இதுவரை 04 இலட்சத்து 35 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, களுத்துறை மாவட்டத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே கூறியுள்ளார்.