இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 5,700 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றல்

by Staff Writer 08-11-2020 | 7:18 PM
Colombo (News 1st) இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த 5,700 கிலோவிற்கும் மேற்பட்ட மஞ்சள் கடற்படையினரால் குதிரைமலை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் நான்கு இந்திய பிரஜைகள் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த 5711 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய உலர்ந்த மஞ்சள் மன்னாரை அண்மித்த குதிரைமலை பகுதியில் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இலங்கையை சேர்ந்த இருவரும் இந்தியாவை சேர்ந்த நால்வருமாக 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் கற்பிட்டி பகுதியை சேர்ந்த 26 மற்றும் 28 வயதானவர்களாவர். சந்தேகநபர்கள் மீனுக்குள் மறைத்து வைத்து மஞ்சளை கடத்தவிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து மஞ்சள் இறக்குமதியை அரசாங்கம் தடை செய்திருந்தது. இதனை அடுத்து இலங்கைக்கு மஞ்சளை சட்டவிரோதமாக கடத்தும் பல முயற்சிகள் தமிழகத்திலும் இலங்கையிலும் முறியடிக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் 11 ஆம் திகதி இராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 510 கிலோகிராமுடைய மஞ்சளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்ததுடன், கடந்த 20 ஆம் திகதியும் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 500 கிலோகிராம் மஞ்சள் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டது