நாளை முதல் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க திட்டம்

நாளை முதல் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க திட்டம்

நாளை முதல் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க திட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2020 | 5:38 pm

Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் நிலையில், நாளை (09) முதல் பொது போக்குவரத்து சேவைகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் பஸ்களை நிறுத்தாமல் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், தனியார் பஸ்கள் என்பன நாளை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதனிடையே, மேல் மாகாணத்தில் மூடப்பட்டுள்ள அதிவேக வீதிகள், போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக நாளை முதல் மீளத்திறக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொலிஸாரினால் அதிவேக வீதிகளின் உட்பிரவேசித்தல் மற்றும் வௌியேறுதல் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாளை முதல் 136 அலுவலக ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தாமல் சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, தனியார் குத்தகை வாகன சேவைகளும் நாளை முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைவாக இந்த சேவைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்