சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளை கண்காணிக்கத் திட்டம்

சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளை கண்காணிக்கத் திட்டம்

சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளை கண்காணிக்கத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2020 | 3:35 pm

Colombo (News 1st) சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளை கண்காணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், சிவில் உடைகளில் பொலிஸ் அதிகாரிகளால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஆகவே, சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறும் ஏதேனும் அவசர தேவைகள் ஏற்படும் பட்சத்தில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகள் மற்றும் கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து எந்தவொரு காரணத்திற்காகவும் வௌியேறவோ உட்பிரவேசிக்கவோ முடியாதெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

அதேபோன்று, அந்த பகுதிகளில் வாழ்வோர் தத்தமது வீடுகளிலேயே இருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ஏதேனும் சுகாதார தேவை மற்றும் அத்தியாவசிய தேவை அல்லது COVID-19 தொற்று அல்லாத வேறு நோய்களுக்காக மருந்தை பெற வேண்டிய அவசியம் காணப்படின் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்வதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் இருதய நோயாளர்களுக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவையல்லாத வேறு ஏதேனும் காரணங்களுக்காக வௌியில் செல்லும் தேவையுடையவர்கள், தமது பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலையம், சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்துகளுக்கான விநியோக சேவைகளுக்கு அனுமதியளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரதேச செயலாளரிடமிருந்து அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மத்தி பகுதிகளில் 05 குடியிருப்பு தொகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மெத்சந்த செவன, மிஹிஜய செவன, முகத்துவாரம் ரன்மின செவன, தெமட்டகொட சிரிசந்த உயன, மாளிகாவத்தை NHS குடியிருப்பு தொகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த குடியிருப்பு தொகுதிகளை அண்மித்த பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனால், அங்கு வசிக்கும் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வௌியில் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், அவசர சுகாதார தேவை மற்றும் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மாத்திரம் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கான அனுமதி குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்திச்செல்ல முடியாதெனவும் பிரதான வீதிகள் அண்மித்து காணப்படும் பட்சத்தில் அந்த பகுதிகளை ஊடறுத்து பயணிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சமூக இடைவௌியை பேணாத மற்றும் முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்யும் நோக்கில் நாளை முதல் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்