திங்கள் முதல் மெனிங் சந்தை திறக்கப்படவுள்ளது

by Staff Writer 07-11-2020 | 6:38 PM
Colombo (News 1st) கொழும்பு மெனிங் சந்தையை எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் திறக்கவுள்ளதாக மெனிங் பொதுச்சந்தை வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், அன்றைய தினம் முதல் விவசாயிகள் தாம் அறுவடை செய்த காய்கறிகளை கொழும்பு மெனிங் பொதுச்சந்தைக்கு அனுப்ப முடியுமென, மெனிங் பொதுச்சந்தை வர்த்தகர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அனில் இந்திரஜித் தெரிவித்துள்ளார். அதேபோன்று, பொருட்கொள்வனவிற்காக சந்தைக்கு வருமாறு நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், மெனிங் சந்தைக்கு வருகை தருவோர், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டியது கட்டாயமென தேசிய அமைப்பாளர் அனில் இந்திரஜித் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டால் விவசாயிகள் அறுவடை செய்த மரக்கறிகளை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமாக இருந்தால், உடனடியாக தமக்கு அறிவிக்கப்பட வேண்டுமென மெனிங் பொதுச்சந்தை வர்த்தகர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அனில் இந்திரஜித் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் முறையான திட்டத்தை வகுக்கும் என தொழிற்சங்க ரீதியில் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.