25 ஆவது அகவையில் நியூஸ்ஃபெஸ்ட்

by Staff Writer 06-11-2020 | 9:31 AM
Colombo (News 1st) இலங்கையின் இலத்திரனியல் ஊடகங்களின் செய்தி அறிக்கையிடலுக்கு புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய நியூஸ்ஃபெஸ்ட் இன்று 25 ஆவது அகவையை வெற்றிகரமாகக் கொண்டாடுகின்றது. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்திற்கு சொந்தமான MTV/MBC ஊடக வலையமைப்பு 1995 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி முதல் முறையாக செய்தி அறிக்கையிடலை ஆரம்பித்தது. சிரச FM மற்றும் Yes FM ஆகிய வானொலி சேவைகள் மூலம் முதன்முதலில் செய்திகள் ஒலிபரப்பாகின. 1995 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி MTV தொலைக்காட்சியினூடாக முதலாவது செய்தி ஔிபரப்பானது. நியூஸ்ஃபெஸ்ட், சிரச, சக்தி, TV1 ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் சக்தி FM, சிரச FM, Yes FM, Y FM, Legend FM ஆகிய வானொலி சேவைகள் மூலமும் WWW.NEWSFIRST.LK என்ற இணையத்தளம் ஊடாகவும் நியூஸ்ஃபெஸ்ட்டின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் ஊடாகவும் நாளாந்தம் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் செய்திகளை வழங்கி வருகின்றோம். நாடளாவிய ரீதியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பிராந்திய செய்தியாளர்களும், U-Reporterகளும் வௌிநாட்டு செய்தியாளர்கள், அலுவலக செய்தியாளர்கள் என பாரிய வலையமைப்பினைக் கொண்டதாக நியூஸ்ஃபெஸ்ட் நாளாந்தம் மக்களுக்கான செய்திகளை வழங்கிவருகின்றது. நாட்டை முன்னிலைப்படுத்தி ''தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்'' எனும் தொனிப்பொருளில் நியூஸ்ஃபெஸ்ட் செய்திகளை வழங்கிவருகிறது. இதன் காரணமாக இயற்கை அனர்த்தங்களின் போது நிவாரணப் பயணம் உள்ளிட்ட மக்கள் நன்மையடையும் வகையிலான பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் முதற்தடவையாக நாட்டின் நாலாதிசைகளையும் ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு ரன்பூமி செயற்றிட்டம், போதைப்பொருளை ஒழிப்பதற்கான திட்டம் மற்றும் சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் நோக்கிலான சிந்தியுங்கள் திட்டம், சிறுவர் துஷ்பிரயோகங்களை ஒழிக்கும் நோக்கில் சிறுவர்களுக்கான திட்டம் , மகளிர் அரண் என்பன நியூஸ்ஃபெஸ்ட் முன்னெடுத்த சில சமூகப் பணிகளுக்கான உதாரணங்களாகும். இதன் காரணமாக நியூஸ்ஃபெஸ்ட் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஆராயும் நியூஸ்ஃபெஸ்ட்டின் தேடல் விசேட தொகுப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குரல் இன்றி இருந்த மக்களுக்கு குரல் கொடுக்கும் வகையிலான மக்கள் சக்தி திட்டம் மற்றும் ஒரு பாரிய சமூகப் பணியாகும். மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டன. தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளம், குறுந்தகவல் சேவையின் ஊடாக மக்களின் நன்மதிப்பை வென்ற செய்திச் சேவையாக நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களைப் பெற்று அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தி பின்னர் அவற்றை எமது செய்திகளாக நாம் தருகின்றோம். நீங்கள் காணும் அந்த செய்திகளை உங்களுக்கு தருவதற்காக பிராந்திய செய்தியாளர்கள் சுடும் வெயிலிலும் கடும் குளிரிலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் எண்ணிலடங்காதவை. இந்த விசேட அணி நியூஸ்ஃபெஸ்ட் ஊடாக நம்பகத்தன்மைவாய்ந்த செய்திகளை உடனுக்குடன் கொண்டுவருவதற்கு 24 மணிநேரமும் தயாராக உள்ளது. நியூஸ்ஃபெஸ்டின் இதயத்தில் இடம்பிடித்த பிராந்திய செய்தியாளர்கள், மக்கள் சக்தி, v force, சக்தி சிரச நிவாரண யாத்திரையை வெற்றிகரமாக முன்னெடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றார்கள். 2009 ஜனவரி 6 ஆம் திகதி அதிகாலை இந்நாட்டின் ஊடக வரலாற்றில் கறைபடிந்த விடியலாகவே பதிவானது. பன்னிப்பிட்டிய தெபானம கலையகத்தின் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். நாலாத்திசைகளிலும் உக்கிரமடைந்த தீச்சுவாலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவதற்கு முன்பே நியூஸ்ஃபெஸ்ட் தனது செய்தி ஔிபரப்பை மீண்டும் ஆரம்பித்தது. கடந்த 25 வருட கால வரலாற்றில் தடைகளைத் தாண்டி பல்வேறு அழுத்தங்கள், எதிர்ப்புகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் மக்களுக்காக நாம் முன்நிற்கின்றோம். 25 வருடங்களாக மக்களின் நலன் கருதி செய்தி அறிக்கையிட்ட நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்தும் புதிய பரிணாமத்தில் மக்களுக்காக பயணிக்கும்.

ஏனைய செய்திகள்