தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியவர் உயிரிழப்பு

by Staff Writer 06-11-2020 | 7:25 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பிய புத்தளம் - நிந்தனிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் - சமகி விளையாட்டரங்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது 55 வயதான அவர் உயிரிழந்துள்ளார். இதனை கண்ணுற்ற பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தாம் பணிபுரிந்த ஹெட்டிபொல பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு கொரோனா நோயாளர் ஒருவர் வருகை தந்ததை தொடர்ந்து அவர் 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதனிடையே, புத்தளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு COVID-19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். புத்தளம் - முன்னேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்களே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அடையாளங்காணப்பட்டுள்ள நோயாளர்கள் ஆடைத்தொழிற்துறையுடன் தொடர்புடையவர்கள் என புத்தளம் பிரதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாரா என்பது தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக அவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புத்தளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 14 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். வென்னப்புவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வயிக்கால, தம்பரவில பகுதியில் தனியார் தொழிற்சாலையொன்றின் நான்கு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நாரம்மல பகுதியில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, குளியாப்பிட்டிய ஹப்புகம்மன பகுதியில் தொழிற்சாலையில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையில் ஊழியர்கள் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி உத்பல சங்கல்ப குணசேகர தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் இன்று முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்