ஜோர்ஜியாவில் ஜோ பைடன் முன்னிலையில்

ஜோர்ஜியாவில் ஜோ பைடன் முன்னிலையில்

by Bella Dalima 06-11-2020 | 8:23 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலையிலுள்ளார். ஜோர்ஜியா மாநிலத்தில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், ஜோ பைடன் 918 வாக்குகளால் முன்னிலையிலுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜோர்ஜியா மாநிலத்தில் இதுவரை 99 வீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்பை விட ஒரு வீத வாக்கு அதிகம் பெற்று ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். ஜோர்ஜியாவில் பைடன் வெற்றி பெறும் பட்சத்தில் தேர்தல் வெற்றியை அவர் அண்மித்திருப்பார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜோர்ஜியாவின் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. இதனிடையே, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு இரகசிய சேவை அதிகாரிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. புதிய ஜனாதிபதியாக உரிமை கோருவது தொடர்பான அறிவிப்பை ஜோ பைடன் நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால், அவரது பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்காவின் ஜனநாயக நடைமுறைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குந்தகம் விளைவித்துள்ளதாக செனட் உறுப்பினர் மிட் ரொம்னி கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடன் குடியரசுக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். நடைபெற்று முடிந்த அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது தொடர்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள செனட் உறுப்பினர் மிட் ரொம்னி , வாக்கு எண்ணிக்கை மிகவும் நேர்மையாக நடைபெற்றுள்ளதாகவும் நாட்டின் ஜனநாயக நடைமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏதாவது மோசடிகள் இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ள மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதாக பென்சில்வேனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.