லங்கா பிரீமியர் கிரிக்கெட் தொடரை நடத்த அனுமதி

by Staff Writer 05-11-2020 | 3:57 PM
Colombo (News 1st) லங்கா பிரீமியர் லீக் (LPL 2020) கிரிக்கெட் தொடரை நடாத்துவதற்கு சுகாதார பிரிவினர் அனுமதியளித்துள்ளனர். இது தொடர்பில் COVID - 19 ஒழிப்பு தொடர்பான தேசிய செயலணியிடமிருந்து அனுமதி கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பதிவினூடாக இந்த விடயத்தை அறிவித்துள்ளார். லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடாத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். 07 மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் அடிப்படையில், போட்டியை நடாத்த திட்டமிட்டுள்ளதாக லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் ரவீன் விக்ரமரத்ன தெரிவித்தார். இதனடிப்படையில், எதிர்வரும் 27 ஆம் திகதி போட்டியை நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். லங்கா பிரீமியர் லீக் தொடரில் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு வீரர்கள் உள்ளடங்கலான 05 அணிகள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.