ஜோ பைடன் தொடர்ந்தும் முன்னிலையில்...

ஜோ பைடன் தொடர்ந்தும் முன்னிலையில்... - டொனால்ட் ட்ரம்ப் வழக்கு தாக்கல்

by Staff Writer 05-11-2020 | 12:20 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் பிரதான 04 மாநிலங்களில் வாக்கெண்ணப்பட்டமை தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி வழக்கு தாக்கல் செய்துள்ளது. பென்சில்வேனியா, மிச்சிகன், ஜோர்ஜியா மற்றும் விஸ்கொன்சின் ஆகிய மாநிலங்கள் தொடர்பிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விஸ்கொன்சின் மாநிலத்தில் வாக்கெண்ணும் பணிகளை மீள முன்னெடுக்குமாறு குடியரசு கட்சியினரால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், பென்சில்வேனியா, மிச்சிகன், ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் வாக்கெண்ணும் பணிகளை நிறுத்துமாறு குடியரசு கட்சியினரால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம், ஜனநயாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலையில் உள்ளார். அந்தவகையில், ஜோ பைடன் 264 தேர்தல் கல்லூரிகளில் வெற்றியை உறுதி செய்துள்ள நிலையில் அவர் வெற்றி பெறுவதற்கு 06 தேர்தல் கல்லூரிகளே தேவைப்படுகின்றன. இந்தநிலையில், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் கல்லூரிகளை தன்வசப்படுத்தியுள்ளார். இதேவேளை, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வௌிநாட்டு தலையீடுகள் இருந்தமைக்கான சான்றுகள் இல்லையென அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சின் உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது. வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை என்பவற்றில் வௌிநாடுகளின் தலையீடுகள் எதுவும் பதிவாகவில்லை என அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சின் உளவுப்பிரிவின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் க்ரெப்ஸ் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.