ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தொடருமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 05-11-2020 | 8:32 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் COVID - 19 ஒழிப்புக்கான சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். COVID - 19 ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி இன்று (05) முற்பகல் கூடியபோதே ஜனாதிபதி இந்த கருத்துகளை வௌியிட்டார். COVID - 19 தொற்றுக்குள்ளானவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டால் அவர் வசிக்கும் பகுதி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். தேவை ஏற்பட்டால் அந்த பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். விசேட பொருளாதார மத்திய நிலையங்களை மொத்த விற்பனைக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு இன்றைய கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தொடர்ச்சியாக PCR பரிசோதனைகளை முன்னெடுத்து சுகாதார பாதுகாப்புடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். தனியார் வைத்தியசாலைகளின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சு மற்றும் கடற்படையினரின் மேற்பார்வையில் வர்த்தக வலையங்களில் எழுமாறாக PCR பரிசோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.