2 திமிங்கிலங்களும் ஒரு டொல்பினும் உயிரிழப்பு

பாணந்துறையில் கரையொதுங்கிய 2 திமிங்கிலங்களும் ஒரு டொல்பினும் உயிரிழப்பு

by Staff Writer 03-11-2020 | 4:11 PM
Colombo (News 1st) பாணந்துறையில் கரையொதுங்கிய திமிங்கிலங்களில் 2 திமிங்கிலங்களும் டொல்பின் ஒன்றும் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றின் பிரேத பரிசோதனைகள் இன்று (03) முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் விலங்குகள் சுகாதார பணிப்பாளர், டொக்டர் தாரக்க பிரசாத் குறிப்பிட்டுள்ளார். பாணந்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கூட்டமாக நேற்று (02) கரையொதுங்கின. இவற்றில் டொல்பின்களும் காணப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். இது குறித்து நேற்று மாலை தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் நேற்றிரவு முதல் திமிங்கிலங்களை மீண்டும் கடலில் விடுவிப்பதற்கு பொலிஸாரும் கரையோர பாதுகாப்பு படையினரும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டதாகவும் டொக்டர் தாரக்க பிரசாத் கூறினார். கரையொதுங்கியவற்றில் 2 திமிங்கிலங்களும் டொல்பின் ஒன்றும் உயிரிழந்ததுடன், திமிங்கிலமொன்றின் உடல் பாணந்துறை கடற்கரையிலும் டொல்பின் மற்றும் மற்றுமொரு திமிங்கிலத்தின் உடல்கள் வாத்துவ கடற்கரையிலும் ஒதுங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். திமிங்கிலங்கள் அனைத்தையும் கடலில் விடுவிப்பதற்கு சுமார் 15 மணித்தியாலங்கள் வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.