சனத் ஜயசூரிய மீதான தடை காலம் முடிவு

சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை காலம் முடிவு

by Staff Writer 03-11-2020 | 4:05 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை காலம் முடிவடைந்துள்ளதால் அவர் மீண்டும் கிரிக்கெட் தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபட முடியும் என என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இந்த விடயத்தை உறுதிபடுத்தும் வகையில் சனத் ஜயசூரிய இன்று (03) அறிக்கையொன்றை விடுத்திருந்தார். தமக்கு விதிக்கப்பட்டிருந்த தடை காலம் முடிவடைந்துள்ளதை சர்வதேச கிரிக்கெட் பேரவையும் அதன் ஊழல் ஒழிப்புப்பிரிவும் அறிவித்துள்ளதாக சனத் ஜயசூரியவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புபடுவதற்கான வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டின்போது தாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக செயற்பட்டதாகவும் சனத் ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். தாம் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை இலங்கையில் கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும் அறிவதாக அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடினமான சந்தர்ப்பங்களில் தமக்கு சக்தியாக அமைந்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு நன்றி கூறுவதாகவும் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் தம்முடன் ஒத்துழைப்புடன் செயற்பட்ட சர்வதேச கிரிக்கெட் பேரவை, அதன் ஊழல் ஒழிப்புப்பிரிவு, ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ மற்றும் சட்டத்தரணி விஷ்வ டி லிவேரா தென்னகோன் ஆகியோருக்கும் சனத் ஜயசூரிய தனது அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை புரிந்த சனத் ஜயசூரிய 110 டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைச்சதங்கள் அடங்களாக 6973 ஓட்டங்களை குவித்துள்ளார். இலங்கை சார்பில் அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர்கள் வரிசையில் அவர் மூன்றாம் இடத்தில் உள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் சனத் ஜயசூரிய 28 சதங்களை குவித்துள்ளார்.