பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் 

சுவாச கோளாறினால் அவதியுறும் நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரிக்கை 

by Staff Writer 02-11-2020 | 2:07 PM
Colombo (News 1st) சுவாச கோளாறினால் அவதியுறும் நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதாரப் பிரிவு, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சுவாச கோளாறு உள்ள நோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் நோய் அறிகுறிகள் இருக்குமாயின், 0117 966 366 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, கொழும்பு தீயணைப்பு பிரிவு திணைக்களத்தின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக 2 நிலையங்களை ஸ்தாபித்து தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக கொழும்பு தீயணைப்பு பிரிவின் தலைவர் பி.டி.கே.ஏ. வில்சன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தீயணைப்பு பிரிவு திணைக்களத்திலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் PCR பரிசோதனைகளை மேற்கொண்டதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் பிரிவின் வைத்திய நிபுணர் தினுகா குருகே தெரிவித்துள்ளார். கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, ஹொரணை ஆடை தொழிற்சாலையில் 34 ஊழியர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. களுத்துறையில் 300 நோயாளர்கள் அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும் சுமார் 8000 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் களுத்துறை பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் களுத்துறை பொது சுகாதார பரிசோதகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.