MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை - ஜனாதிபதி

MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை - ஜனாதிபதி உறுதி

by Staff Writer 01-11-2020 | 9:04 PM
Colombo (News 1st) தமது அரசாங்கத்தின் கீழ் MCC உடன்படிக்கையில் ஒருபோதும் கைச்சாத்திடுவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு எதிரான எதிர்ப்பை சிலர் வௌியிடுவதாக வார இறுதி பத்திரிகையான அருண பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கனவிலாவது MCC உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை. MCC உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால் அவ்வாறு நடக்குமென்றும் இவ்வாறு நடக்குமென்றும் மக்களை ஈர்ப்பதற்காக சிலர் கூறுகின்றனர். எனினும், உடன்படிக்கையில் நாம் கைச்சாத்திடுவதில்லை. MCC உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால் தாம் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக சிலர் கூறுகின்றனர். இது பார்வையாளர்களுக்காக கூறப்படும் விடயம். அமெரிக்க இராஜதந்திர குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்தால், முதலில் அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்கள் குறித்தே கலந்துரையாடுவர். எனினும், இம்முறை மனித உரிமை விவகாரங்கள் குறித்து நாமே அமெரிக்காவிற்கு ஞாபகப்படுத்தினோம். பழைய விடயங்களை மறந்து அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட அமெரிக்க இராஜாங்க செயலாளர் விருப்பம் தெரிவித்தார். சீனாவிற்கு அல்லது வேறு நாடுகளுக்கு அடிபணியாமல் இறைமையை பாதுகாக்கும் கொள்கையில் நாம் உள்ளோம் என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம். எமது நாட்டை வேறு நாடொன்றுக்கு எதிராக பயன்படுத்துவதற்கும் வேறு நாடொன்றின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு பயன்படுத்துவதற்கும் இடமளிப்பதில்லை என்பதையும் கூறியுள்ளோம். இந்தியா எமது சம்பிராதாய உறவினர். சீனா எமக்கு நெருக்கமான நாடு. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்காக எமது நாட்டை பயன்படுத்துவதற்கு இடமளிப்பதில்லை என்பதையும் நான் கூறியுள்ளேன்
என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.