நாட்டில் 10,663 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 10,663 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 01-11-2020 | 8:25 AM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை 10,663 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொரோனா நோயாளர்கள் 239 பேர் நேற்று (31) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 102 பேர் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மற்றும் துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட 81 பேர் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 21 பேர் இதில் அடங்குகின்றனர். இதற்கிணங்க, திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 7,083 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். நாட்டில் 20 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் இன்று (01) தீர்மானிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனிடையே, குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மத்துகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதுகம மற்றும் புதிய குடியேற்றத் திட்டம் கிராம உத்தியோகத்தர் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.