கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை 

by Staff Writer 01-11-2020 | 7:43 PM
Colombo (News 1st) பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் என்பன பாதிக்காத வகையில் COVID - 19 தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பதிலாக வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுப்பது தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லுமாறு சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான PCR பரிசோதனைகள் 10 நாட்களுக்குள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிடைக்கும் PCR முடிவுகளை அடுத்து, கொரோனா தொற்று உறுதி செய்யப்படாதவர்களை 14 நாட்களின் பின்னர் சாதாரண வாழ்க்கைக்கு அனுமதிக்குமாறும் அவர் கூறியுள்ளார். COVID - 19 தொற்று ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான இன்றைய கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். COVID - 19 தொற்று தொடர்பில் அனுபவம் இல்லாத இதற்கு முன்னரான காலப்பகுதியில் பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கத்தினால் இயன்றதாகவும் அப்போது எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை பின்பற்றி தற்போதைய பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமெனவும் அவர் கூறியுள்ளார். மேலும், PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமென தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதன் முடிவுகள் விரைவில் வழங்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார். தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் கண்காணிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோக செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி, மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவுகளை வீடுகளுக்கே சென்று வழங்குமாறும் அறிவித்துள்ளார். இதனிடையே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக 10000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை தொடர்ந்தும் வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.