78 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா; சுகாதார அமைச்சின் ஊழியருக்கும் தொற்று

by Staff Writer 31-10-2020 | 7:56 PM
Colombo (News 1st) 78 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று தெரிவித்தார். மேலும் 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெகுஜன ஊடக அமைச்சின் நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் உதவி பணிப்பாளர், அபிவிருத்தி அதிகாரியொருவர் மற்றும் இரண்டு அலுவலக உதவியாளர்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக களுவெவ தெரிவித்தார். அதனையடுத்து, 40 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் செயற்பாடுகளை பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். ஹொரணை ஆடைத் தொழிற்சாலையொன்றின் பெண் ஒருவருக்கும் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் அந்த தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. திடீரென மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. பயண வரையறை விதிக்கப்பட்டுள்ள குருநாகல் - மல்லவபிடிய, வில்கொட பிரதேசத்தில் கொரோனா நோயாளர்களுடன் நெருங்கி செயற்பட்ட 200 பேருக்கு இன்று PCR பரிசேதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அங்கு 16 COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டின் தற்போதைய நிலமையில் சிலாபம் மீன் சந்தையை அண்மித்த பகுதியிலும் வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாபம் மீன் சந்தை அண்மையில் மூடப்பட்டதுடன், பின்னர் மீனவர்கள் மீன் சந்தையை அண்மித்த பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். முடக்கப்பட்டிருந்த ஹட்டன் நகரம், சில கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்பட்டது. நகரில் இன்று கடைகள் திறக்கப்பட்டிருந்ததுடன், ஹட்டனின் முதலாவது COVID-19 நோயாளி அடையாளம் காணப்பட்ட, ஹட்டன் சந்தை தொகுதியை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இன்று முற்பகல் அங்கு சில கடைகள் திறக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அவற்றை மூடுவதற்கு பொதுசுகாதா பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்தனர். கேகாலை - புலத்கொஹூபிட்டியவில் 11 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால், புலத்கொஹூபிட்டிய, லவல, அம்பமல்ல, பன்னல கிராமங்களைச் நேர்ந்த 70 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.