ஹட்டன் நகரில் வர்த்தக நிலையங்கள் திறப்பு

ஹட்டன் நகரில் வர்த்தக நிலையங்கள் திறப்பு

by Bella Dalima 31-10-2020 | 5:55 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட ஹட்டன் நகரம் வரையறைகளுடன் இன்று மீள திறக்கப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கொள்வனவின் நிமித்தம் கடைகள் திறக்கப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். எனினும், ஹட்டனில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளங்காணப்பட்ட பகுதியில் வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், இன்று திறக்கப்பட்டிருந்த அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களையும் முற்பகல் வேளையில் மூடுவதற்கு பொது சுகாதார பரிசோதகரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி, மேல் மாகாணத்திலிருந்து வௌியேறிய சிலர் ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, ஒருவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக டிக்கோயா நகர சபை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எஸ்.மெதவெல தெரிவித்தார். குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினூடாக அவருடன் வருகை தந்த மேலும் ஐவர் இனங்காணப்பட்டதாகவும் பொது சுகாதார பரிசோதகர் கூறினார். இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஐவரும் டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவை, கொட்டகலை மற்றும் டங்கல் தோட்டத்தை சேர்ந்தவர்களெனவும் அவர் தெரிவித்தார். மேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாளை மறுதினம் அதிகாலை 05 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஐவரும் கடந்த 28 ஆம் திகதி தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென டிக்கோயா நகர சபை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எஸ்.மெதவெல தெரிவித்தார். மேலும், தமது பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கேகாலை புளத்கொஹூபிட்டிய பகுதியில் COVID-19 தொற்றுக்குள்ளான 11 பேர் அடையாளங்காணப்பட்டனர். இதனையடுத்து, புளத்கொஹூபிட்டிய, பன்னல உள்ளிட்ட சில பகுதிகளில் சுமார் 70 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.